மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக, குக்கர் சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின் முடிவில் , ஒரு பொதுச் சின்னத்தை அமமுகவுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.  நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அமமுகவுக்கு ஒதுக்க வேண்டிய சின்னம் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் மூழ்கினர்.

 
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் உண்டு என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. இதேபோல பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும் பொது சின்னம் ஒதுக்கப்பட்டுவிடும். சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக ‘ப்ரீ சிம்பல்’ என்ற பட்டியல் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. இதில் 198 சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து சுயேட்சைகள் தாங்கள் விரும்பும் மூன்று சின்னங்களை விருப்பமாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பார்கள்.
அந்த அடிப்படையில் சுயேட்சைகள் கோரியுள்ள சின்னங்கள் பற்றி தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்தபோது, தமிழகத்தில் 36 சின்னங்களை எந்தச் சுயேட்சைகளும் கோரவில்லை என்பது தெரியவந்தது. இதில் பரிசுப் பெட்டி சின்னமும் ஒன்று. இந்த 36 சின்னங்களையும் எந்தச் சுயேட்சைகளும் கோரவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, அதிலிருந்து ஒரு சின்னத்தை தேர்வு செய்ய அமமுகவுக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து தகவல்  தெரிவிக்கப்பட்டது

.
தினகரன் ஆலோசனைக்குப் பிறகு 36 சின்னங்களிலிருந்து பரிசுப் பெட்டியை அமமுக தேர்வு செய்தது. எந்தச் சுயேட்சைகளும் கேட்காத பரிசுப் பெட்டி சின்னத்தை வாங்கி, அதைப் பிரபலமாக்கி வருகிறார்கள் அமமுகவினர்.