இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட நடக்க முடியாதவர்தான் மாரத்தான் வீரர் மாசு என்றும், ஆனால் அவர் 100 மாரத்தான் ஓடியதாக பொய் செல்கிறார் என்றும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன்  விமர்சித்துள்ளார்.  

இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட நடக்க முடியாதவர்தான் மாரத்தான் வீரர் மாசு என்றும், ஆனால் அவர் 100 மாரத்தான் ஓடியதாக பொய் செல்கிறார் என்றும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

மராத்தான் ஓட்டுகிறேன் என்று சொல்லுகிற மா.சுப்ரமணியன் எவ்வளவு நிமிடத்தில் ஓடி முடித்தார் என்று சொல்ல முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சராக இருப்பவர் மா.சு என்கிற மா.சுப்ரமணியின் இவர் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி தொடங்கி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை செல்வாக்கு மிகுந்தவராக இருந்துவருகிறார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை மேயராக பதவி வகித்த மா.சு சுற்றிச் சுழன்று ஆற்றிய பணியை சென்னை மக்கள் இன்றளவும் பாராட்டி வருகின்றனர். மேயர் என்றால் அது மா.சுப்ரமணியன்தான் என்று பலரும் பாராட்டும் அளவிற்கு சிறந்த மேயராக, சிறந்த நிர்வாகியாக அவர் செயல்பட்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது.

62 வயதாகும் மா.சு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் அவரின் இடது கால் மூட்டு பல துண்டுகளாக உடைந்தது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு விடாமுயற்சியுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.இதுவரை 25 முறை 21.1 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சிலும் இடம்பிடித்துள்ளார்.

பத்து ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சராகவும் தற்போது அவர் பதவி வகித்து வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது இரண்டாவது கொரோனா அலை உச்சத்தில் இருந்தபோது, மக்கள் கொத்துக்கொத்தாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்தச் சூழலை சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்ற நபர் மாசுதான் என தேர்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரை சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கினார். பொறுப்பை உணர்ந்து கொண்ட மா.சு சுற்றிச் சூழ்ந்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில் வைரஸ்க்கு கட்டுக்குள் வந்தது. ஆட்சிக்கு வந்து 9 மாத காலமாகியும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும் கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மக்களால் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். அப்போது மேடையில் பேசிய முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசினார். அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு: - இந்த தேர்தலில் பாஜகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும், திமுகவினர் எதையும் செய்ய துணிவர், சேகர்பாபு, மா. சுப்ரமணியன் போன்றவர்கள் களத்தில் இறங்கக்கூடியவர்கள். சுப்ரமணியத்தை பற்றி கூற வேண்டும் என்றால், மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை ஏதோ திமுகவே மக்களுக்கு கொடுத்து என்று கூறி பிரச்சாரம் செய்வார். சுப்ரமணியத்தை பாதி நேரம் தொலைக்காட்சியில் பார்க்கலாம், ஒரு சாதாரண நர்ஸ் கம்பவுண்டர் செய்கிற வேலையை தான் மா.சுப்ரமணியன் செய்து கொண்டிருக்கிறார். இவரை பல அமைச்சர்களுக்கு பிடிப்பதே இல்லை. 

பாதி நேரம் மராத்தான் ஓடுகிறேன் என்று கூறுகிறார், மராத்தான் ஓடுகிறேன் என்று சொல்லுகிற மா.சுப்ரமணியம், எத்தனை நிமிடத்தில் மராத்தான் முடித்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறாரா? நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது ஆர்ப்பாட்டம் நடந்தது, அப்போது அண்ணா சாலையில் இருந்து அண்ணா சமாதி வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது, அதைகூட நடக்க முடியாமல் பாதி வழியில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வெறும் இரண்டு கிலோ மீட்டர் கூட நடக்க முடியாத மராத்தான் வீரர்தான் மா.சுப்ரமணியன். ஆனால் 100 மாரத்தான் ஓடியதாக பொய் சொல்கிறார். நூறு மராத்தான் ஓடக்கூடியவர் ஏன் 2 கிலோ மீட்டர் கூட நடக்க முடியவில்லை.? இவ்வாறு கராத்தே தியாகராஜன் விமர்சித்தார்.