எப்போதும் சேலையில் வலம் வரும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திடீரென ஜீன்ஸ் பேண்ட், சர்ட் ஷூ அணிந்து மாடர்னாக அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச பெண் அரசியல்வாதிகள் மாநாட்டில் கலந்து  கொள்ளச் சென்ற உடை பேசுபொருளானது. 

சமூகவலைதளங்களில் ஜோதிமணி ஆடை குறித்து கருத்துக்களை பரப்பி வர்ந்தனர். '’எடப்பாடி வெளிநாட்டில் கோட் சூட் போட்டதை பாராட்டி பேசினீர்கள். இப்போது ஜோதிமணி பேண்ட் சட்டை போட்டதுக்கு விமர்சனம் செய்கிறார்கள்’’ என்றும் ‘’ஜோதிமணி அவர்கள் அணிந்திருக்கும் உடை ஒரு கோடி என்று கூறுகிறார்கள். உண்மையா?’’ என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.

அமெரிக்காவிலிருந்து அழைப்பு விடுத்தால், அமெரிக்கா சென்றுதானே விருது பெறமுடியும். கையெழுத்து இடுவதற்காகமட்டும் வெளிநாடு பயணிக்கும் பிரதமர் செல்வது சரியென்றால்...  தோழர் ஜோதிமணி அவர்கள் சென்றதும் சரிதான். அவர்கள் என்ன உடுப்பு அனிய வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்கக்கூடாது’’என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர்.

நாட்டின் பிரதமர் தமிழகத்திற்கு வந்தபோது வேட்டி சட்டையோட வந்தார். ஏன் நீங்க வெளிநாட்டுக்கு போகும்போது சேலை உடுத்திட்டு போக மாட்டீங்களோ? ஜோதிமணி அவர்களே சேலை உடுத்த  வெட்கப்படுகிறார்கள்? இல்லை! இந்த தமிழ் மண்ணிலிருந்து வருகிறேன் என்று காட்டிக் கொள்வதற்கு வெட்கப்படுகிறீர்களா?’’ என்று ஜோதிமணிக்கு எதிராகவும் பதிவிட்டு வந்தனர். 

இந்நிலையில் இதற்கு அமெரிக்காவில் இருந்தபடி பதிலடி கொடுத்துள்ளார் ஜோதிமணி, இதுகுறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், "சர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் நான் கலந்துகொண்டதற்காக எனக்கு வாழ்த்துகள் வந்து கொண்டிருக்கின்றன. என் உடை குறித்து விமர்சிக்கும் காவிவாதிகள், பெண் வெறுப்பாளர்களின் நெஞ்செரிச்சலைப் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிகழ்வுக்கு எப்படி உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இது என்னுடைய தனிப்பட்ட உரிமை. அமைதியாகுங்கள்’’ எனப்பதிலடி கொடுத்துள்ளார். 

ஏன் எப்போதும் பெண்ணின் உடை விவாதத்துக்கு உள்ளாகிறது? ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் மீது மற்றவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? அனைத்து ஆண்களும் குறிப்பாக உடை குறித்து விமர்சிப்பவர்கள், தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வேட்டி அணிகின்றனரா? மற்றவர்களை மதிப்பதுதான் தமிழ்- இந்தியக் கலாச்சாரம். அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

காட்டன் புடவைகள், ஜீன்ஸ், ஷார்ட் ஷர்ட்டுகள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமான உடைகள். நான் திரும்பி வந்தவுடன், அவற்றில் சிலவற்றை நீங்கள் மேலும் நெஞ்செரியும் வகையில் பதிவிடுவேன். அதுவரை, கலாச்சாரம் என்றால் என்ன எனத்தேடுங்கள். பெண்களுக்கு மட்டும் முன்னோக்கிச் செல்வதில் ஏன் இத்தனை சுமைகள்? ஏன் ஆண்களுக்கு இல்லை.

பெண் தலைவர்கள் தங்கள் தோற்றம், உடை, சிரிப்பு, மண வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி தாக்கப்படுகிறார்கள் என்பதும் ஆண்கள் ஏன் அவ்வாறு அணுகப்படுவதில்லை என்பது குறித்தும் விவாதிப்பதே இந்தக் கூட்டம். பெண்கள் மீதான இந்த வெறுப்பை எதிர்த்துதான் நாங்கள் உறுதியுடன் போராடுகிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் அனைத்து ஆண்களுக்கும் நன்றி," என ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.