தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏதேனும் திட்டம் நிறைவேறினால் அதை முதலில் எதிர்ப்பது அதிமுகதான் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பெரும்பாலானா மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

அந்த வகையில் தமிழகத்தில் பாஜகவின் பினாமி அரசு என அதிமுக அரசை எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. 

ஆனால் அதிமுக அரசின் அமைச்சர்களோ பல்வேறு விஷயங்களில் மோடியை ஆதரித்து பேசி வந்த நிலையில் தற்போது அப்படியே தலை கீழாக மாறி மத்திய அரசையும் பாஜக கட்சியையும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 

ஏற்கனவே பாஜகவை சேர்ந்த தமிழிசை, பொன்னார், ஆகியோருக்கும் அதிமுக எம்.பிக்கள் அமைச்சர்களுக்கும் கடும் வார்த்தை போர் விளையாண்டது. 

கடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவிடம் தோற்றுப்போன பாஜக அரசு இனிவரும் தேர்தல்களில் தமிழகத்தில் எப்படியாவது இடத்தை பிடிக்க வேண்டும் என முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. 

அதனால் தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளிலும் ஆளுநர் மூலமும் மத்திய அமைச்சர்கள் மூலம் ஆதிக்கம் ஓங்கியிருப்பது போன்று தெரிகிறது. 

இதனிடையே மத்திய அரசை பற்றி கருத்து தெரிவிக்காமலே இருந்து வந்த முதலமைச்சர் எடப்பாடி கூட காவிரி மேலாண்மை விஷயத்தில் விமர்சித்து பேசினார். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என பகிரங்கமாக சவால் விடுத்தார். 

இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏதேனும் திட்டம் நிறைவேறினால் அதை முதலில் எதிர்ப்பது அதிமுகதான் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.