Hindu Makkal Parties Protest
நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைக் நீக்கக்கோரி சென்னையில் உள்ள சத்யம் தியேட்டர் மற்றும் திருச்சியில் உள்ள மெகா ஸ்டார் தியேட்டர் முன்பு இந்து மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம்தான் மெர்சல். இந்த படத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன், எஸ்.விசேகர் ஆகியோர் குறிப்பிட்ட வசனங்களை நீக்க கோரி குரல் கொடுத்தனர்.
ஆனால் மெர்சல் படத்தில் உள்ள வசனங்களுக்கு மற்ற அரசியல் கட்சிகளும் திரையுலகினரும் பலத்த ஆதரவு தெரிவித்தனர். மெர்சல் படத்தில் காட்சிகள் நீக்கப்படுமா அல்லது நீக்கப்படாதா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்திருந்தது.
தற்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முறியடிக்கப்பட்டு, மெர்சல் திரைப்படம் நாளுக்குநாள் தனது சாதனைகளைப் பட்டியலிட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியினர், மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னையில் சத்யம் திரையரங்கில் மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல், திருச்சியில் மெகா ஸ்டார் திரையரங்கம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் திருச்சி மாரி தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
