மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தினாலும், ஆளுநரின் முடிவை அறிந்த பின்னரே தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், Covid - 19 காலகட்டத்தில், கொரோனா தவிர பிற நோய்த்தொற்றுகளும் பரவாமல் இருக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் RT - PCR சோதனைகள், காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா நோய்த்தொற்று பரவலின் வீரியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

சந்தைகளில் மக்கள் தனி மனித இடைவெளியின்றி கூடுவதைக் காண முடிவதாகக் கூறிய ராதாகிருஷ்ணன், பண்டிகை காலகட்டங்களில் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த ராதாகிருஷ்ணன், பண்டிகை காலத்தில் காய்ச்சல் வந்தால் இணையதளங்களை நம்பாமல் பொதுமக்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.இறுதியாக பேசிய ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநரின் முடிவை அறிந்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.