தமிழக அமைச்சர்களில் இதுவரையில் பெரியளவு சர்ச்சையில் சிக்காமல் இருந்தவர், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தான். ஆனால் அதில் யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை, மனுஷனுக்கு எதிராக ஒரு பஞ்சாயத்துக் கிளம்பிட, செம்ம அப்செட்டில் இருக்கிறார் அன்பழகன். 

விவகாரம் இதுதான்....

சமீபத்தில் செல்வம் கொழிக்கும் கட்டுமான நிறுவனங்கள் சிலவற்றில் வருமான வரித்துறை ரெய்டு வகையாக நடந்தது. அதில் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனமும் ஒன்று. ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் பெரும்பாலானவை உயர்கல்வித் துறை டெண்டர்கள் சம்பந்தப்பட்டதாகவே இருந்ததாம். 

இந்த நிறுவனம் வழியாகவும் உயர்கல்வித்துறையின் டெண்டர்கள், பல லட்டர்பேடு நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட விபரங்கள் புலனாகியதாம். இந்த டெண்டர் முடிவுகளின் பின்னணியில் இருப்பது அமைச்சரா?...என்று நூல் பிடித்துப் போனதில் இப்போது அவரது பொலிடிகல் பி.ஏ. வேலு வரை வந்து நிற்கிறார்கள். இவரை வகையாக விசாரித்தால் செமத்தியான தில்லுமுல்லு விபரங்கள் தெரிய வரும்! என்று  டெல்லி வரை தகவல்கள் பறந்திருக்கின்றனவாம். எனவே கூடிய விரைவில் வேலுவை  தங்கள் கைகளுக்குள் கொண்டு வரும் முடிவில் இருக்கின்றனர். 

அமைச்சர் அன்பழகனின் நிழலாக பார்க்கப்பட்டவர் வேலு. எனவே அவருக்கு அடுத்து அமைச்சர் வரை விசாரணை நீளுமா? என்று இப்போதே கோட்டை வட்டாரத்தில் கொளுத்திப் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க. அதிகார மையத்தினுள்ளேயே அமைச்சர் அன்பழகனுக்கு ஆகாத ஒரு டீம் உள்ளது. அது, பன்னீர் அணியை சேர்ந்த முனுசாமி டீம்தான். அன்பழகனுக்கு எப்போது கட்டையை உருவலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த முனு, இப்போது இந்த விவகாரத்தை டெல்லி வரை கொண்டு சென்று அமைச்சருக்கு எதிராக அழுத்தம் கொடுக்கிறாராம். 

உயர்கல்வித்துறை விஷயமென்பதால் டெல்லி நிச்சயம் நுணுக்கமாக நடவடிக்கை எடுக்குமென்பது முனுசாமியின் எண்ணம். ஆனால் அமைச்சரோ, தன் கையில் எந்த அழுக்குமில்லை! என்று சொல்லி வருவதோடு, தேர்தல் பரபரப்பில் இந்த பஞ்சாயத்து அமிழ்ந்து போகுமென பெரிதாய் நம்பி வருகிறார்.