Asianet News TamilAsianet News Tamil

குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு!! உயர்நீதிமன்றம் அதிரடி

high court order to cbi inquiry on gutkha case
high court order to cbi inquiry on gutkha case
Author
First Published Apr 26, 2018, 11:39 AM IST


குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றதை அடுத்து, குட்கா கிடங்கு ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஒரு டைரி சிக்கியதாகவும் அதில், குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்தது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையை மேற்கொண்டுவந்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி ஜெயக்கொடி மாற்றப்பட்டார். அதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால், இந்த வழக்கில் உண்மை வெளிப்படாது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணையின்போது, மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதற்காக 55கோடி ரூபாய் வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா கடன் உரிமையாளர் ரூ. 56 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்போதைய டிஜிபி எழுதிய ரகசிய கடிதம் கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கூடாது எனத் தொடக்கம் முதலே தமிழக அரசு கடும் தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசின் இந்த நடவடிக்கையே மேலும் இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கத் தூண்டுவதாக தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த முறைகேட்டில் மற்ற மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதால் சிபிஐக்கு மாற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை எனவும் கேள்வி எழுப்பி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை மூடுவிழா செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக அண்மையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பல அதிகாரிகள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அப்போது தான் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது உள்ளிட்ட அனைத்தையும் விசாரிக்க வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக போதிய விளம்பரம் அளித்து மக்களின் தகவல்களை பெற வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios