தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது ஏன் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது(தீர்ப்பு நிலுவையில் உள்ளது). 

ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்தது சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். அப்படியானால், எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதும் சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்டதுதானே.. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

அதற்கு உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது, தனிமனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நீதிமன்றம் விசாரித்தது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கமளித்தார்.