வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிராக அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வேலூர் தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி, தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து
உத்தரவிட்டார். இந்நிலையில் வேலூரில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், தேர்தல் ரத்தால் தாங்கள்
பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், திட்டமிட்டபடி நாளை வேலூரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ‘’பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட
வேட்பாளரை தகுதி நீக்கம் செய்துவிட்டு வேலூரில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்
வாதாடினர்.

 

அப்போது நீதிபதிகள், ’’பணப்பட்டுவாடா விஷயத்தில் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை எப்படி தகுதி நீக்கம் செய்வது? தேர்வு
செய்தவரைத் தான் தகுதி நீக்கம் செய்ய மக்கள் பிரதிநிதி சட்டத்தில் இடம் உண்டு. பட்டுவாடாவில் ஈடுபட்ட வேட்பாளரை தேர்தலில்
போட்டியிட எப்படி அனுமதிக்க வேண்டும்?’’எனக் கேள்வி எழுப்பினர். அப்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்பாக வாதாடிய
வழக்கறிஞர், திமுக வேட்பாளர் ஒருவர் வீட்டில் நடந்த பணப்பட்டுவாடாவுக்காக தேர்தலை நிறுத்துவது நியாயமா? என கேள்வி
எழுப்பினார்.