தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில், சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் சுமார் 127 கோடி ரூபாய் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை, கோவிட் சிகிச்சை மையமாக மாற்ற தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-  மாண்புமிகு அம்மாவின் அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பல்வேறு நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

இதன் ஒரு அங்கமாக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக சென்னைக்கு கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூபாய் 127 கோடி பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை கோவிட் சிகிச்சை மையமாக மாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்,  இதனைத் தொடர்ந்து இம்மையம் 750 படுக்கை வசதிகள் கொண்ட தொகுதி சிகிச்சை மையமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இவற்றுள் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 300 படுக்கை வசதிகளும்,  60 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் அடங்கும். இம்மையத்தில் 16 கூறு சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்கோகார்டியோகிராம், 6 நடமாடும் எக்ஸ்ரே கருவிகளும், 28 வென்டிலேட்டர்கள், 

40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள், 10 நடமாடும் ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள் 3 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உலகத்தரம் வாய்ந்த இம்மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளார், தமிழக முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் இந்நடவடிக்கைகள் மூலம் கொரோனா சிகிச்சை தமிழகத்தில் மேலும் வலுப்படும் என்பது உறுதி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.