நாட்டில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமல் இருந்திருந்தால் 8 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால், இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 8063 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதுதொடர்பாக பிரதமர் மோடி ஓரிறு தினங்களில் அறிவிக்க உள்ளார். 


இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் நாட்டில் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 586 மருத்துவமனைகளை கோவிட் 19 மருத்துவமனைகளாக மாற்றியுள்ளோம். இந்த மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகளும் 11,500 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இருந்திருந்ததால் ஏப்ரல் 15ம் தேதிக்குள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8.2 லட்சமாக இருந்திருக்கும்.” என்று லாவ் அகர்வால் தெரிவித்தார்.