தமிழகத்தின் மிகப்பெரிய குழப்ப அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தம்பிதுரை! தானும் குழம்பி, கட்சிக்காரர்களையும் குழப்புகிறார்! என்று விமர்சனங்கள் அவர் மீது வரிசை கட்டுகின்றன.
தமிழகத்தின் மிகப்பெரிய குழப்ப அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தம்பிதுரை! தானும் குழம்பி, கட்சிக்காரர்களையும் குழப்புகிறார்! என்று விமர்சனங்கள் அவர் மீது வரிசை கட்டுகின்றன. குறிப்பாக எதிர்கட்சியினர் கெக்கே பிக்கேவென அவரை போட்டு வறுத்தெடுக்கின்றன.
காரணம் இதுதான்.

அ.தி.மு.க.வின் மற்ற நிர்வாகிகளைப் போலவேதான் தம்பிதுரையும் பி.ஜே.பி.யை பார்த்தால், இன்ஸ்பெக்டரான அர்ஜூனை பார்த்து சிரிக்கும் ஹெட்கான்ஸ்டபிள் வடிவேலுவை போல் ‘மல, நல்லாருக்கியா மல!’ எனும் ரேஞ்சுக்கு நட்பு பாராட்டினார்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான வைப்ரேஷன் ஆரம்பித்து, கடந்த சில வாரங்களாக தன்னுடைய தொகுதிக்குள் வலம் வர துவங்கியிருக்கிறார். ‘ஓ இதுதான் கரூர் தொகுதியா?’ எனும் ரேஞ்சுக்கு இவர் தன் கிராமங்களைப் பார்க்க, மக்களோ ‘ஓ இவர்தான் நம்ம எம்.பி.யா?’ என்று ஷாக்காகின்றனர். ஷாக்கான மக்கள் ச்சும்மா இருப்பார்களா பைப்ல தண்ணி வரல, ரேஷனுக்கு பொருட்கள் வரல, பள்ளிக்கூடத்துக்கு போதுமான டீச்சர்ஸ் வரல, அஞ்சு வருஷமா தொகுதிப்பக்கம் நீங்களும் வரல! என்று போட்டுப் புரட்டினர்.

போகுமிடமெல்லாம் போர்க்களமானதால் நொந்து போன தம்பிதுரை சட்டென்று ஒரு புது டெக்னிக்கை கையிலெடுத்தார். அதன்படி, மத்திய அரசை தாறுமாறாக தாக்கி எடுக்க துவங்கினார். ’ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்’ என்று அரசியல் ரீதியில் குத்துவதில் துவங்கி ‘மத்திய அரசு நிதியை அறிவிப்பதோடு சரி, அஞ்சு பைசா கூட ஒதுக்குவதில்லை’ என்று மக்கள் பிரச்னை வரை விளாசித் தள்ளினார்.
துவக்கத்தில் இதை பி.ஜே.பி.யும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நாளாக நாளாக தம்பிதுரையின் தாக்குதல் அதிகமாகி, அது பி.ஜே.பி.யின் பெயரை ரொம்பவே டெமேஜ் செய்ததால் சினம் கொண்டு சிலிர்த்து எழுந்தனர். டெல்லிக்கு வந்த இடத்தில் தம்பிதுரையை சின்னதாக ரவுண்டு கட்டி சில விளக்கங்களை கொடுத்து, சில கேள்விகளையும் கேட்டனர் பி.ஜே.பி.யின் முக்கிய புள்ளிகள் சிலர்.

அடுத்த ஃப்ளைட் பிடித்து தமிழ்நாட்டுக்கு வந்த தம்பிதுரை ‘இதுவரைக்கும் நான் மத்தியரசை திட்டுனதையெல்லாம் நீங்க உண்மைன்னு நம்பிட்டீங்க. ஹய்யோ! ஹய்யோ!’ என்று அடிச்சாரே ஒரு ஜெர்க்கு. அவனவன் ஆடிப்போயிட்டான். அதன் பிறகு பிரதமர் அண்ட்கோவை திட்டாமல், துவைக்காமல் தம்பிதுரை வலம் வந்ததால் டெல்லியும் அவரை கண்டுகொள்ளாமல் விட்டது.
இந்நிலையில் இப்போது கஜா புயலுக்குப் பின் கரூரில் பேட்டி கொடுத்த தம்பிதுரை மீண்டும் துவக்கிவிட்டார் டெல்லிக்கு எதிரான தனது கில்லி தாக்குதல்களை. அதன்படி “கஜா புயல் பாதிப்பை சரி செய்ய தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம். புயல் ஏற்படும் போதெல்லாம், குழு அமைப்பதற்கு முன்பாக மத்திய அரசு நிவாரண தொகையை அறிவிப்பது வழக்கம். ஆனால் தற்போது இதுவரை நிதி அறிவிக்கப்படவில்லை.” என்று ஒரு சொருகு சொருகினார்.
ஆக மறுபடியும் தம்பிதுரை முதல்ல இருந்து வர துவங்கியிருப்பதால், ‘ஏன் இப்படி மாத்தி மாத்தி நிலைப்பாடு எடுத்து குளப்புறீங்க? நீங்க எப்பவுமே இப்படித்தானா?’ என்று காய்ச்சி ஊற்றத் துவங்கியுள்ளனர் எதிர்க்கட்சிகள்.
