இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அனுமதி பெற்றுள்ளனர்.

அதன்படி நேற்று சென்னைக்கு டிடிவி.தினகரனை அழைத்து வந்தனர். அவருடன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளார். நேற்று இருவரது வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடந்தது.

இதையடுத்து இருவரையும் சென்னை ராஜாஜி பவனில் போலீஸ் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இன்று 2வது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில், சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு ரூ.10 கோடி அனுப்பியது தெரியவந்துள்ளது.

மேலும், ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி போலீசார், டிடிவி.தினகரனை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹவாலா பணம் பரிமாற்றத்தில் டெல்லியை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் நரேஷ், வெளிநாட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஹவாலா ஏஜென்ட் நரேஷ், தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று இரவு முதல் போலீசார் மாறுவேடத்தில் டெல்லி விமான நிலையத்தில் முகாமிட்டனர்.

அதன்படி இன்று காலை தாய்லாந்து விமானத்தில் நரேஷ் டெல்லி திரும்பினார். அவரை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.

டிடிவி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் இதுவரை தேர்தல் ஆணையத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்கும் அழைக்கப்படவில்லை. அனைத்து ரகசியமாக நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் டிடிவி.தினகரனின் உதவியாளர், வழக்கறிஞர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்பட பலரிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவுக்கும், ஹவாலா ஏஜென்ட் நரேஷுக்கும் தொடர்பு இருக்கிறதா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.