கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைகள் இல்லாவிட்டாலும் ,வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப் படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வடபழனி பகுதியில், கொரனோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முக கவசம் அணிதல், சமூக விலகலை கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்களிடையே வலியுறுத்தும் விதமாக, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தனியார் தன்னார்வலர் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெருப்பில் சாகசம் செய்தல் , தாரை தப்பட்டை உடன் கூடிய சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சைக்கிளில் மூலமாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதி வாசிகளுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிய அமைச்சர், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் தடுப்பு முகாமை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார், அவர் தெரிவித்ததாவது, கொரோனா தடுப்பில் தமிழகம் இந்தியா மற்றும் பிறமாநிலங்களுக்கு முன் மாதிரியாக உள்ளது. இந்தியாவிலே தமிழகத்தில தான் அதிக நபர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது, அதே நேரத்தில் சிகிச்சை பெற்று திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் குறைவான மாநிலம் தமிழகம்தான். கோடம்பாக்கம் மண்டலத்தில் 185 காய்ச்சல் முகாம் மூலம், 1,33,000 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, 4200 பேர் அறிகுறி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டு 2925 பேருக்கு  கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

78 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் உள்ள 39000 தெருக்களில் 9000 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் படிப்படியாக தொற்று குறைந்து வருவதாகவும், இந்திய அளவில் கொரோன நோய் தொற்று தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாகவும் தெரிவித்தார். சென்னையில் இதுவரை 96 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும்,மீதம் இருக்கும் பலர் சொந்த ஊருக்கு சென்று இருக்கும் சூழலில் தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு,குடும்ப அட்டை இல்லாத
வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்போது அமைச்சர் தெரிவித்தார்.