திமுகவில் வாரிசு அரசியல் இல்லையென சொன்னார், ஆனால் மாணவரணி செயலாளராக இருந்த எனது நண்பர் வெள்ளக்கோவில் சாமிநாதனை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு தனது மகன் உதயநிதியை அப்பதவிக்கு ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார் என பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

இதுகுறித்து தனது முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்;  திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், திமுக பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த நம்பகத்தன்மையில்லாத கட்சி என்பதற்கு இந்த வாரிசு நியமனம் ஒரு உதாரணமாகும்.  

இதை கழக கண்மணிகள் உணர்ந்து அந்த இயக்கத்தை விட்டு வெளியே வாருங்கள். ஒரு முறை மிக மோசமாக சங்கரமடத்தை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு கருணாநிதி ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கரமடம் அல்ல. நீங்கள் நினைத்தவர்களையெல்லாம் நியமிப்பதற்கு என விமர்சனம் செய்திருந்தார்.  

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என சொன்ன ஸ்டாலின் தற்போது மகனை ஸ்டாலினை கொண்டு வந்தார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின், என் குடும்பத்திலிருந்து யாரும், அது என் மகனாக இருந்தாலும் சரி, மருமகனாக இருந்தாலும் சரி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் என்றார்.

ஆனால், ஏற்கெனவே திமுக மாணவரணி செயலாளராக இருந்த எனது நண்பர் வெள்ளக்கோவில் சாமிநாதனை குப்பையில் போடுவதைப்போல தூக்கி போட்டுவிட்டு தனது மகனை அந்த பதவிக்கு ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார் என திமுகவை விமர்சித்துள்ளார்.