தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால், எச்.ராஜாவின் பேச்சுக்களையும், கருத்துக்களையும் பார்க்கும்போது, அவர் அதற்கு எதிராக செயல்படுகிறார் என்றே எண்ண தோன்றுகிறது.

எதை சொன்னால், எதை செய்தால் பாஜக வை வளர்க்கமுடியும் என்று சிந்திப்பதை விட, எதை சொன்னால், எதை செய்தால், பாஜகவை அழிக்க முடியும் என்றே அவர் சிந்தித்து செயல்படுவதாகவே தெரிகிறது. 

இவரால், மக்களிடம் தங்கள் கொள்கையை விளக்கி ஏற்க வைத்து வெற்றி பெற முடியாது. மற்ற கட்சியினருடன் விவாதம் செய்தும் வெற்றி பெற முடியாது.

அதனால், மற்றவர்களை மனம் போன போக்கில் விமர்சிப்பதும், மற்றவர்களின் மனது புண்படும் வகையில் பேசி வருவதும் அவருக்கு வாடிக்கையாகி விட்டது.

நெடுவாசல் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர் என்று, அந்தப்பகுதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை கொச்சை படுத்தினார்.

விவசாயிகள் போராட்டம் பற்றி, மோடி எதுவும் வாய் திறக்கவில்லையே என்று செய்தியாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி கேட்டபோது, அவரை தேச துரோகி என்றார்.

வரி செலுத்தும் எனக்கு கேள்வி  கேட்கும் உரிமை உள்ளது என, செய்தியாளர் கூற, உன் வரிப்பணத்தை நான் திருப்பி தருகிறேன் என்றார்.

தற்போது, நிர்வாண போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என பலவித கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, அவர்கள் போராட்டம் நடத்துகிறார்களா? இல்லை குரங்கு வித்தை காட்டுகிறார்களா என்று கேவலமாக பேசியுள்ளார்.

யார் போராடினாலும், அவர்கள் காங்கிரசை எதிர்த்து, வெள்ளைக்காரி சோனியாவை எதிர்த்து போராட வில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.

மக்கள் கொஞ்சம் கூட அங்கீகரிக்காத, மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்ட எச்.ராஜா இப்படி பேசுவது, அவர் சார்ந்த கட்சிக்கும், அவர் வகிக்கும் பொறுப்புக்கும்  களங்கம் விளைவிக்குமே தவிர, எந்த வகையிலும் புகழ் சேர்க்காது.

எச்.ராஜாவின் கொள்கையும், சித்தாந்தமும் ஏற்புடையதா? இல்லையா? என்கிற விஷயம் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ஒவ்வொரு பேச்சும், கருத்தும், மக்களையும், எதிர் தரப்பையும் காயப்படுத்துவதாகவே உள்ளது.

இது, சர்வாதிகார ஆட்சிக்கு வேண்டுமானால் உதவலாமே ஒழிய, ஜனநாயக ஆட்சிக்கு உதவாது. இதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், தாம் பிறந்து, வளர்ந்த மக்களிடம் செல்வாக்கை வளரத்துக் கொண்டு, தாம் சார்ந்துள்ள இயக்கத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது எப்படி? என்றுதான் யோசிக்க வேண்டுமே ஒழிய, இருப்பதையும் இழந்துவிட வழி வகுக்க கூடாது.

பாஜக மூத்த தலைவர்கள் இதை அவருக்கு உணர்த்தினால் நல்லது. இல்லையெனில், பாஜக தமிழகத்தில் காலூன்றுவது என்பது சாத்தியம் இல்லாமலே போய்விடும்.