தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நீட் தேர்வு அவசியம் என்றும், பிளஸ் 2 வில் கட்-ஆப் மார்க் இல்லையே என்று கவலைப்படும் மாணவர்களுக்கானதுதான் நீட் தேர்வு என்று பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் போராடி வருகின்றன. தமிழக மாணவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டதே திராவிட கட்சிகள்தான் என குற்றம்சாட்டினார்.

இரு திராவிடக்கட்சிகளுமே ஊழலில் ஊறித் திளைத்தவர்கள்தான் என தெரிவித்த எச்.ராஜா, ஜெயலலிதாவுக்கும் பிறகு அதிமுகவில் அதிகாரப் போட்டி நிலவுவதாக கூறினார்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப்பூசலுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ராஜா  குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நீட் தேர்வு அவசியம் என்றும், பிளஸ் 2 வில் கட்-ஆப் மார்க் இல்லையே என்று கவலைப்படும் மாணவர்களுக்கானதுதான் நீட் தேர்வு என்றும் தெரிவித்தார்