சேலம் மாணவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கையே எனவும் தமிழக காவல் துறையினர் எதற்கும் பயப்படக்கூடாது எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன், ஒஎன்ஜிசிக்கு எதிராக சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதனால் சேலம் போலீசார் அவரை கைது செய்து கடந்த 13 ஆம் தேதி சிறையில் அடைத்தனர். 

இதனைதொடர்ந்து மாணவி வளர்மதி மீது நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக கூறி குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

இந்நிலையில், வளர்மதி மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தை பாய்ச்சியுள்ளது குறித்து செய்தியாளர்கள் ஹெச் ராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது  சேலம் மாணவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கையே எனவும் தமிழக காவல் துறையினர் எதற்கும் பயப்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.