நாட்டின் எதிரிகள் யார் என்பது திமுகவால் வெளிப்பட்டு விடும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவித்தது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதனை தொடங்கி வைத்தார். வரும் 8-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு கோடி கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், ’’சிஏஏ விற்கு எதிராக திமுக நடத்தும்  கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்து கையொப்பம் இடுபவர்களது பெயர் வெளிவரும் போது நாட்டின் எதிரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும். அதுவும் நல்லது தானே. எனவே அதை நான் வரவேற்கிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவாக, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் என்பது பொதுமக்களை மிரட்டும் வேலையே... நடைமுறையில் அரசியல் கட்சி தலைவர் வந்து உங்கள் வீட்டுக்கோ (அ) வியாபாரம் நடக்கும் இடத்திற்கோ 40-50 பேருடன் வந்து கையெழுத்து கேட்டால் மறுக்க முடியுமா என்ன? இயல்பான பயம் பொதுமக்களுக்கு இருந்தே தீரும்’’எனக் கூறுகின்றனர்.