பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பாஜக மீண்டும் பீகாரில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.அதற்கு காரணம் 'கோமாதா சாபம் பொல்லாதது' அதனால் தான் பாஜக மீண்டும்  ஆட்சியை தக்கவைத்திருக்கிறது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது.மெகா கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இக்கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (எஸ்), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை தலா 4 தொகுதிகளில் வென்றுள்ளன. இதன் மூலம் முதல்வா் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு 125 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.

மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 75 தொகுதிகளும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இது தவிர கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.பிகாரில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு உள்ளிட்டவை ஆளும் கூட்டணிக்கு எதிராக இருக்கும் என்றே கருதப்பட்டது. பல்வேறு கணிப்புகளும் ஆளும் கூட்டணிக்கு வெற்றி கிடைக்காது என்றே கூறியிருந்தன. எனினும், இவை அனைத்தையும் முறியடித்து முதல்வா் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவைவிட நிதீஷ் குமாரின் ஜேடியூ குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், நிதீஷ் குமார் தான் முதல்வா் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக பிரமுகர் எச்.ராஜா, ’’தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பை பொய்யாக்கி பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னனி. உபி, மபி, குஜராத் தெலுங்கானா உட்பட அனைத்து மாநில இடைத் தேர்தல்களிலும் பாஜகவே முன்னனி’’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும், காங்கிரஸ் கூட்டணி ஏன் தோற்கும் நிலையில் இருக்கிறது என்பது குறித்து, ‘’மாட்டுத் தீவன ஊழல் குடும்பம் ஒருநாளும் பீகாரில் ஆட்சிக்கு வர முடியாது. கோமாதா சாபம் பொல்லாதது’’என்று தெரிவித்திருக்கிறார்.