நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக  மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலைவிட  21 தொகுதிகள் அதிகமாக பெற்று பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியாக  352 இடங்களைகப் பிடித்துள்ளது.

ஆனால் தமிழத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. மத்திய அமைச்சர் பொன்னார், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா , நயினார் நாகேந்திரன்  என 5 முக்கிய வேட்பாளர்கள் களம் இறங்கியும் தோல்விதான் மிஞ்சியது.

தற்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் முக்கியமானவர்கள் குறித்து மோடியும், அமித்ஷாவும் ஆலோசித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் ஒரே ஒருவர் மட்டுமே ஜெயித்திருப்பதால் ஓபிஎஸ் மகனுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. பாஜகவுக்கு ஒரு எம்பியை கூட தராத மாநிலமாக தமிழகம் இருந்தாலும் மத்திய அமைச்சர் பதவியைத் தருவது என்று பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியைத் தழுவியவருமான ஹெச்.ராஜா அவசரமாக டெல்லி சென்றுள்ளார். 

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போதே , ‘இந்த முறை பாஜக ஆட்சி அமைத்தால், நான் வனம் மற்றும் சுற்று சூழல் துறை அமைச்சராவது உறுதி எச். ராஜா கூறி வந்துள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவையில் தமிழக பாஜகவின் பிரதிநிதியாக ஹெச்.ராஜா இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

எச். ராஜா மத்திய அமைச்சரானால் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் ஆதரவோடு தமிழ்நாட்டில் இருந்தே மாநிலங்களவை  எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் தகவல்கள் வெளியாகியுள்ளன.