டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் எங்களை முதன்மைச் செயலாளர் மரியாதை குறைவாக நடத்தினார். அதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும் கூறியுள்ளனர். இது டி.ஆர்.பாலு மற்றும் மாறனின் ஆதிக்க ஆணவப் போக்கை எடுத்துக் காட்டுகிறது. ஈ.வெ.ரா காலம் முதல் தி.க, தி.மு.க பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான அமைப்புகளாகவே செயல்பட்டுள்ளது.
தங்களது நடவடிக்கை மற்றும் பேச்சுக்காக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து வழங்கினார்கள். இந்தச் சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் எங்களை அவமானப்படுத்தும்விதமாக நடந்துகொண்டார் என்று திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். அவருடைய அறையில் தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை அலறவிட்டு சத்தத்தை கூட குறைக்க விடாமல் எங்களை அவமானப்படுத்தினார் என்று டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.

தலைமைச் செயலாளர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்னை கொண்டுவருவோம் என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு எச்சரித்தார். திமுக எம்.பி.களின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தலைமை செயலாளர் சண்முகம், திமுக தலைவர் மீதும் மதிப்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, சண்முகம் ஆகியோர் பேட்டிகள், அறிக்கைகள் மூலம் பேசிய நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை விமர்சித்து ‘தலைக்கணம் செயலாளர்’ என்ற பெயரில் கட்டுரை எழுதப்பட்டது.

