கருப்பு சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை திமுக வெற்றி பெற முடியாது என அண்ணண் அழகிரி சொன்னதை ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கருப்பு சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை திமுக வெற்றி பெற முடியாது என அண்ணண் அழகிரி சொன்னதை ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.

அப்போது மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார். மோடி அரசை அகற்றுவோம்.. மதவெறி அரசை அகற்றுவோம் என்று கூறினார். இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். தனி மனித சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். 

இதற்கு டிவிட்டரில் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் ஸ்டாலினின் சவாலை ஏற்க தயார் என கூறியுள்ளார். மோடியின் காவித் தொண்டர்கள் அதற்கு தயாராக உள்ளோம் என்றும் களம் காண்போம் என்றும் கூறினார்.

 இதையடுத்து மற்றொரு பதிவில் கருப்பு சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை திமுக ஒருபோதும் வெற்றி பெற முடியாது என அண்ணண் அழகிரி சொன்னதை மறந்துவிட வேண்டாம் என்றும் ஸ்டாலினுக்கு எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். காவிகளின் பலம் என்னவென்று வரும் 2-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் பார்ப்போம் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.