* கூட்டணி வைக்க, பயமுறுத்தவே அ.தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகள் நடந்தன. அதற்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும் பயந்து நடுங்கினர். கூட்டணி ஏற்பட்டுவிட்டதால் இப்போது ரெய்டு நடவடிக்கைகள் கிடப்பிற்கு போயுள்ளன: பெங்களூரு புகழேந்தி
(விடுங்க தல, இந்த ட்ரிக்கெல்லாம் ஒரு காலத்துல அவிய்ங்களே அ.தி.மு.க.ட்ட படிச்ச பால பாடம்தானே! கஞ்சா, ஹெராயினெல்லாம் கண்டுபிடிச்சது போதைக்கு மட்டுமா? சிலரை வழிக்கு கொண்டு வரவும், சிலரோட வளர்ச்சியை முடக்கவும்தானே. அதேமாதிரிதான் இதுவும்னு போலீஸ் பக்கம் பேசிக்கிறாய்ங்க.)

* எதிர்கட்சிகளின் கூட்டணிதான் ஆட்சி அமைக்க போகுது. ஆனால் யாருடைய தலைமையில் ஆட்சி அமைய போகிறது என்பது தேர்தலின் பின்னரே தெரியும்: மணிசங்கர் அய்யர். (அட அய்யர் ஜி நீங்க தூங்கி எழுந்திருச்சிட்டீங்க போல! ஓ தேர்தல் வருதா? சரி சரி பல்லை வெளக்கிட்டு, காஃபியை குடிங்க. வெள்ளையும் சொள்ளையுமா கெளம்புனாதானே சீட்டு கீட்டு கேட்க முடியும்.)

* பா.ம.க.வும், அது சார்ந்திருக்கும் கூட்டணியும் அதிகளவில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கு பல நன்மைகள் வந்து சேரும். அதேநேரத்தில் எதிரணியினர் வென்றால் தமிழகம் வேட்டைக்காடாக மாறிவிடும்: ராமதாஸ். ( அது கெடக்கட்டும் டாக்டரே! சென்னை பிரஸ் கிளப்புல ஒரு குடும்பம் வந்து ஒக்காந்து  ஏதோ தைலாபுரம் பார்ட்டி, ஸ்லோ பாய்சன்! அப்படின்னு கண்ணீர் விட்டாய்ங்களே, அதப் பத்தி கொஞ்சம் டீட்டெயிலா பேசுறது!)

* இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துவிடும்! என்று ஸ்டாலின் நம்பினார். ஆனால் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியின் விஸ்வரூபத்தை பார்த்து, இனி ஜெயிக்க முடியாது! எனும் நிலையை உணர்ந்து முடங்கியுள்ளார்: ஹெச்.ராஜா. 
(இம்பூட்டு வெளக்கம் சொன்ன நீங்க...அந்த மூணு தொகுதிகளுக்கும் ஏன் இடைத்தேர்தல் அறிவிக்கலைங்கிற ரகசியத்தை ஓப்பனா (அதாவது உண்மையை) சொல்லிட்டீங்கன்னா, உங்க அட்மின் சார்பாவே உங்களுக்கு தாறுமாறான பாராட்டுவிழா நடத்துவோம் ஜி!)

* கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல் இந்த முறை தனித்து போட்டியிட முடியவில்லை எந்த கட்சியாலும். அதனால்தான் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன. கடந்த முறை போல் இந்த முறையும் அ.தி.மு.க. அமோகமான வெற்றி பெற்று தேசிய அளவில் முத்திரை பதிக்கும்: தம்பிதுரை (அப்புறம்ணே பழைய பஞ்சாயத்தெல்லாம் மறந்து, மறுபடியும் பி.ஜே.பி.க்காக பாட்டு பாட ஆரம்பிச்சாசு போலிருக்குது. சீட்டுக்காக யாகமெல்லாம் நடத்துனீங்களாம்! யார் மேல பயந்து யாகம் பண்ணுனீங்க தல, டெல்லி மேலேயா இல்ல சென்னை மேலேயா?)