நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவர் என்று கூறப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி அவர் மீது கோபமாக இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இந்தியா முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு மோடி எனும் ஒற்றை தலைமை தான் காரணம் என்று கூறியிருந்தார். அதே சமயம் தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததற்கு மோடி எதிர்ப்பு அலை காரணம் என்றும் ரஜினி தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த கருத்து தமிழக பாஜக ஆதரவாளர்கள் மற்றும் மோடி ஆதரவாளர்கள் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தவர் என்று கூறப்படுபருமான ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அதிமுக கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கிடைத்துள்ளதாகவும் ஆனால் பாஜக போட்டியிட்ட தொகுதி எதிலும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமே மக்கள் யார் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்பதும் யாருக்கு எதிரான அலை தமிழகத்தில் இருந்தது என்பதும் தெரிய வருகிறது என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

மிகுந்த மரியாதைக்குரிய நபர்கள் சிலரை தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மிகுந்த மரியாதைக்குரிய நபர் என்று கூறியிருப்பது நடிகர் ரஜினியை தான். ஏனென்றால் ரஜினிதான் செய்தியாளர் சந்திப்பின்போது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை என்கிற வாதத்தை முதன் முதலில் எடுத்து வைத்தார். அவரை குறிப்பிட்டு ஆடிட்டர் குருமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மிக நெருக்கமான நண்பராக இருந்தாலும் ரஜினி மோடிக்கு எதிராக பேசியதை ஆடிட்டர் குருமூர்த்தியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தில் வெளிப்பாடாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் குருமூர்த்தி ரஜினியை மறைமுகமாக கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.