தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அனைத்துத் தொகுதிகளிலும் எந்தவித  அசம்பாவிதம் இல்லாமல் வாக்குப் பதிவு முடிந்தது. ஆனால், அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் வாக்குப் பதிவு முடியப் போகும்போது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.

அங்குள்ள ராசாத்திபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு முடியப் போகும் நிலையில் திடீரென ஆயிரக்கணக்கானோர் கூடினர். 

இதையடுத்து வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது, கலைந்து செல்லுங்கள் போலீஸார் கூறினர். ஆனால் பொதுமக்கள் கலையாமல் வரிசையில் முண்டியடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டுள்ளார். 

இதையடுத்து மக்கள் கூட்டம் சிதறி ஓடியது. அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக காணப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரம் சீல் வைக்கும் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் திடீரென பொது மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் வாக்குச் சாவடியைக் கைப்பற்றும் நோக்கத்தில் வந்திருப்போர்களோ என விசாரணை நடைபெற்று வருகிறது..