gujarath election date will be announce today
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி கடந்த 10 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலமும் இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலமும் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைகிறது.
இதனிடையே, இமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. ஆனால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அது அறிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, வாக்காளர்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஏதுவாகவே அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி வெளியிடப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
