குஜராத் மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை போலீசார் கடத்தியதாக கூறப்பட்ட விவகாரத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரசார் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நிகழ்ச்சிகள் முடங்கின.

குஜராத் மாநிலத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை முன்னிட்டு, போலீசாரால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிக்கடி அவையின் மைய மண்டபத்துக்கு சென்று கோஷம் எழுப்பிய அவர்கள், தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா திருடிவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்த அமளி காரணமாக நேற்று பிற்பகல் 2.30 மணி வரை 4 முறை அவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன. ‘பூஜ்ஜிய நேர’த்தின்போது இரு முறையும் கேள்வி நேரத்தில் இரு முறையும் இந்த ஒத்திவைப்பு நிகழ்ந்தது.

நேற்று காலை அவை கூடியதும், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா இந்த பிரச்சினையை எழுப்பியதும் உறுப்பினர்கள் மைய மண்டபத்துக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேர இடைவெளியில் 4 முறை அவை தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக குலாம் நபி ஆசாத் பேசுகையில் கூறியதாவது-

 ‘‘காங்கிரசில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் விலகியது குறித்தும் அவர்களில் ஒருவர் உடனடியாக பா.ஜனதா சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்தும் நான் பிரச்சினை எழுப்பவில்லை.

ஆனால், புனாபாய் காமித் என்ற தலித் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, மற்றொரு எம்.எல்.ஏ. வீட்டிற்கு தேநீர் அருந்தச் சென்றபோது அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடத்தி இருக்கிறார்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனந்த் சர்மா பேசும்போது பா.ஜனதா போலீசாரைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை கடத்தியது குறித்து ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். அப்போது அவர், எம்.எல்.ஏ.க்கள் திருடப்படுவதாக பா.ஜனதா மீது குற்றம் சாட்டினார்.

கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களை விடுவித்து மாநிலங்களவை இடைத் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை சமாதானப்படுத்த குரியன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்த பிரச்சினையில் அவைத்தலைவர் தலையிட்டு தேர்தல் நியாயமாக நடைபெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என, ஆசாத் யோசனை தெரிவித்தார்.

அதற்குப் பதில் அளித்த குரியன் தேர்தல் நியாயமாக நடைபெற இந்த அவையின் உத்தரவு தேர்தல் ஆணையத்துக்கு தேவை இல்லை. நியாயமாக தேர்தலை நடத்துவது அவர்கள் கடமையாகும் என தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி பேசும்போது ஜனநாயகத்தை பாதுகாக்க அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

குலாம் நபி ஆசாத் பேசும்போது கூறியதாவது-

‘‘தேனீர் அருந்தச் சென்ற எம்.எல்.ஏ.வை கடத்திய போலீஸ் அதிகாரி, அவரிடம் ‘‘அடுத்த தேர்தலில் காங்கிரஸ் உங்களுக்கு டிக்கெட் கொடுக்க்கூடாது என முடிவு செய்துள்ளது.

எனவே நீங்கள் கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேருங்கள். உங்களுக்கு தேர்தலில் டிக்கெட் வாங்கித்தர கட்சித் தலைவரிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்’’ என்று கூறி இருக்கிறார்.

அந்த போலீஸ் அதிகாரி, போலி என்கவுண்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். அவர் விரித்த வலையில் சிக்காத அந்த எம்.எல்.ஏ., தான் உடை மாற்றிவிட்டு வருவதாகக் கூறி போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பி வந்து இருக்கிறார்’’.

இவ்வாறு ஆசாத் கூறினார்.