திமுக ஆட்சி பொறுப்பேற்று மே 7-ஆம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது, இந்த ஓராண்டில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்திருப்போமோ அதையெல்லாம் இந்த ஒரே ஆண்டில் திமுக அரசு செய்திருக்கிறது. 

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை படிப்படியாக இந்த ஸ்டாலின் நிறைவேற்றி காட்டுவேன் என்பதை உறுதியாகத் தெரிவிப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், “பல துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதான் ஒரு நல்ல ஆட்சியின் இலக்கணம், மக்களுக்கான அரசு. இதைத்தான் திராவிட மாடல் அரசு என்று பெருமையோடு சொல்கிறோம். வளர்ச்சியை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுடைய மாடல். இதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். ஒவ்வொரு தனிமனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் இலக்கு. 

அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் திராவிட மாடல். திமுக ஆட்சி பொறுப்பேற்று மே 7-ஆம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது, இந்த ஓராண்டில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்திருப்போமோ அதையெல்லாம் இந்த ஒரே ஆண்டில் திமுக அரசு செய்திருக்கிறது. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். கொரோனா என்ற அந்த கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம். தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாகவே மாற்றினோம். இதுவரை தமிழ்நாட்டில் 91 சதவீதம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4,000 வழங்கினோம்.

13 வகையான மளிகை பொருட்கள் தரப்பட்டன. பொங்கல் பரிசாக 22 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் யாரும் குறைப்பதற்கு முன்பாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்தோம். பஞ்சுக்கு ஒரு சதவீத வரி, அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி, புதிய கடன்கள் வழங்குதல், கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவித்தொகை, அந்த குழந்தைகளுக்கு ‘இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற ஒரு உன்னதமான இன்னொரு திட்டம், ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டம், அரசு பள்ளி மாணவிகளின் மேல்படிப்புக்காக மாதம் ரூ.1,000 உதவித் தொகை என சொல்லிக்கொண்டே போகலாம்.

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. இன்னும் 5 சதவீதம், 10 சதவீதம் இருக்கிறது, அதை நான் மறுக்கவில்லை. அதையும் நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக இந்த ஸ்டாலின் நிறைவேற்றி காட்டுவேன் என்பதை மீண்டும் உறுதியோடு தெரிவிக்கிறேன்” என்று ஸ்டாலின் பேசினார்.