சென்னை – சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தில் எப்படியேனும் நிறைவேற்றிய தீர வேண்டும் என்று இரண்டு திட்டங்களை தீட்டியுள்ளது. அதில் ஒரு திட்டம் சென்னை – சேலம் இடையிலான எட்டு வழிகளை கொண்ட பசுமை வழிச்சாலை. மற்றொன்று தேனி பொட்டி புரத்தில் நியூட்ரீனோ ஆய்வகம் அமைப்பது. இந்த இரண்டு திட்டங்களில் சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.

இதனால் தான் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்த மறுநாளே தமிழக அரசு பணிகளை துவங்கியது. மின்னல் வேகத்தில் சாலைக்கான நிலத்தை அளவீடும் பணிகள் துவங்கின. சுமார் 98 விழுக்காடு நில அளவை பணிகள் முடிந்துவிட்டன. நிலம் கொடுப்பவர்களுக்கான இழப்பீடு தொகையை வழங்குவதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் தான் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை நிலத்தில் இருந்து யாரையும் வெளியேற்றக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அல்ல தலைமைச் செயலாளர் தொடங்கி இந்த திட்டத்தை செயல்படுத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

ஏனென்றால் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை தீபாவளிக்கு பிறகு வைத்துக் கொள்வதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டிருந்தது. திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் தேதிக்காக தமிழக அரசு காத்திருக்கிறது என்கிற ஒரு தகவலும் உண்டு. இந்த நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.    

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் மிகவும் பிடிவாதமாக உள்ளார். அண்மையில் சென்னை வந்த போது தன்னை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடியிடம் கூட பசுமை வழிச்சாலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்றே நிதின் கட்கரி கூறியிருந்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உடனடியாக மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கும் தகவலாக சென்றுள்ளது.  இதனால் டெல்லியில் இருந்து எந்த நேரத்தில் என்ன வருமோ என்று தமிழக அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.