ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது அப்பாவிப் பொது மக்கள் 13 போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது பற்றியும் கல்வித் தகுதி குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது. 

அதன் அடிப்படையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 19 நபர்கள் அரசு வேலை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்கள் 19 பேருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.