அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை அரசியலாக்க வேண்டாம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசும், அமைக்கக்கூடாது என கர்நாடக அரசும் வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய வகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமித்தார். ஆளுநரின் இந்த செயல், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமைந்தது.

துணைவேந்தர் நியமனத்திற்கு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் யாருக்குமே தகுதியில்லையா என்ற கேள்வியை முன்வைத்து தொடர்ந்து எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெற்றுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் நலன் கருதியே துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதில் தலையீடு ஏதும் இல்லை. துணைவேந்தர் நியமனம் விதிகளின்படியே நடைபெற்றுள்ளதால் அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரில் ஒருவர் தான் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.