Governor Banwarilal Purohit going meet CM

காவிரி விவகாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், விவசாய அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது
குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே வரும் 3 ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், ஆளுநரை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துமாறு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் கேட்டுக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை, ராஜ்பவனில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேறுகும் முதலமைச்சர் பழனிசாமி, நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். காவிரி விவகாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.