அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை உறுதிப்படுத்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது. ஜூன் மாதம் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது பின்னர் அது செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவாக இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. மருத்துவ கலந்தாய்வு இதனால் தாமதமாகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழக அமைச்சர்கள் 5 பேர் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஆளுநர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் தாமதப்படுத்தும் முயற்சி என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 3 வாரங்கள் ஆகும் என ஆளுனர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மையென்றால்  3 வார அவகாசம் காலம் தாழ்த்தும் முயற்சியே!

நவம்பர் இறுதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில்  #MCI உத்தரவிட்டால்,  மாணவர்  சேர்க்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் எழும் அல்லது எழுப்ப வைக்கப்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்தப்படுவதைத் தான் அதிகார மையங்கள் விரும்புகின்றனவோ?

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.