முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றார்.
இதையொட்டி நேற்று காலை அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது, ஒ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைதொடர்ந்து சசிகலாவை, சட்டமன்ற அதிமுக தலைவராக, அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதாக தேர்வு செய்தனர். பின்னர், சசிகலாவே முதலமைச்சராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி தீர்மானமும் நிறைவேற்றி, அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர்.
இதையடுத்து, வரும் 9ம் தேதி சசிகலாவுக்கு, தமிழக கவர்னர் (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர், பதவி பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஊட்டியில் இருந்த கவர்னர் வித்யாசாகர், நேற்று மாலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். இன்று காலை சென்னை திரும்பினார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கவர்னர் வித்யாசாகர் ராவை, ராஜ்பவனில் சந்தித்தார். அப்போது, தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். அதனை ஏற்று கொண்ட கவர்னர், சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்கும் வரை, ஓ.பி.எஸ். முதல்வராக நீடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
