கலைஞர் மறைவை தொடர்ந்து சென்னையிலேயே தங்கியிருந்த அழகிரி நாளை (23.08.18) அல்லது நாளை மறுநாள் (24.8.18) மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. சென்னையில் வரும் 5ந் தேதி கலைஞர் நினைவிடத்தை நோக்கி மு.க.அழகிரி அமைதிப் பேரணி செல்ல உள்ளார். இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் பேரை பங்கேற்க செய்ய வேண்டும் என்பது அழகிரியின் எண்ணம். ஆனால் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் முதல் அடிமட்ட தி.மு.க தொண்டர்கள் வரை யாரும் அழகிரியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இருந்தாலும் கூட கூட்டத்தை கூட்டி செப்டம்பர் 5ல் தனது பலத்தை காட்டும் முரட்டு முயற்சியில் அழகிரி தீவிரம் காட்டி வருகிறார்.

இதுநாள் வரை சென்னையில் தங்கியிருந்தபடியே தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அழகிரி ஈடுபட்டிருந்தார்.   தி.மு.கவில் தன்னால் வளர்ந்த பலரை அழகிரி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது அழகிரிக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் நேரடியாக களம் இறங்குவதை தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு அழகிரி வந்துள்ளார். சென்னைக்கு குட் பை சொல்லிவிட்டு மதுரைக்கு சென்றால் தான் வேலை ஓரளவிற்காவது நடக்கும் என்பது அவரது நம்பிக்கை.  இதற்காக நாளை அல்லது நாளை மறுநாள் சென்னையில் இருந்து அழகிரி மதுரை செல்கிறார். அங்கு தனது வீட்டில் வைத்து முதலில் மதுரையில் உள்ள தனது ஆதரவாளர்களை அழகிரி சந்திக்கிறார். அதன் பிறகு தென் மாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்களை சந்திக்க அழகிரி திட்டமிட்டுள்ளார். அழகிரி மதுரை வருவதை முன்னிட்டு அங்கு சுவர் விளம்பரங்கள் எழுதும் பணி தொடங்கியுள்ளது.

 மீண்டும் மதுரையில் ஆங்காங்கே அஞ்சா நெஞ்சர் என்கிற பேனர்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன. செப்டம்பர் 5 சென்னைக்கு அழைக்கிறார் அஞ்சா நெஞ்சர் என்பது தான் பேனர்களின் சாராம்சமாக இருக்கிறது. இந்த பணிகளை தீவிரப்படுத்த கணிசமான தொகையை அழகிரி ஒதுக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது- மேலும் தான் மதுரை விமான நிலையத்திற்கு வரும் போது தன்னை வரவேற்கவும் ஒரு பெரும் கூட்டத்தை வரவழைக்கும் ஏற்பாட்டிலும் அவர் உள்ளார்.

 

 இந்த பணிகளை மதுரையில் உள்ள அழகிரியின் ஆதரவாளர் இசக்கி முத்து மேற்கொண்டு வருகிறார்.  அழகிரி மதுரை சென்றதும் இந்த பணிகள் மேலும் வேகம் எடுக்கும் என்கிறார்கள். மதுரை மட்டும் அல்லாமல் தனது ஆதிக்கத்தில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை,மதுரை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஏன் புதுக்கோட்டையில் கூட சுவர் விளம்பரங்களுக்கு அழகிரி உத்தரவிட்டுள்ளார். மேலும் தி.மு.க தொண்டர்கள் வரவில்லை என்றாலும் தங்களது வழக்கமான பாணியில்  தென்மாவட்டங்களில் இருந்து ஆட்களை கொண்டு சென்று சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் குவித்துவிடுவது என்பது தான் அழகிரியின் இறுதி திட்டமாக உள்ளது. இதன் காரணமாக அழகிரியின் ஆதரவாளர்கள் கைகளில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.