Asianet News Tamil

கடவுள் மீது பழியை போட்டா மக்கள் மட்டுமல்ல கடவுளும் மன்னிக்கமாட்டார்... முதல்வரை தாறுமாறாக விமர்சித்த டிடிவி.!

தங்களின் திறமையின்மையால் நாளுக்கு நாள் சூழல் மோசமாகி வருவதை மறைப்பதற்குத்தான் முதல்வர் தற்போது கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிறார் முதல்வர் என  டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

God will not forgive...ttv dhinakaran slams edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Jun 22, 2020, 3:29 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தங்களின் திறமையின்மையால் நாளுக்கு நாள் சூழல் மோசமாகி வருவதை மறைப்பதற்குத்தான் முதல்வர் தற்போது கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிறார் முதல்வர் என  டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களிலும் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், கடவுளின் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழக ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பது நியாயமல்ல.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா நோய் தாக்குதல் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், கோவை என பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவு என்று கூறியிருக்கும் முதல்வர் பழனிசாமி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார் என்று தெரியவில்லை.

இ-பாஸ், வாகனச் சோதனை, தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்வதாக ஆட்சியாளர்கள் தெரிவித்துவரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை இப்படி அதிகரிக்கிறது வருகிறது. ஆனால், இதுபற்றிய கவலை ஆள்வோருக்கு இல்லை என்பதற்கு முதல்வரின் அலட்சியமான பேட்டியே உதாரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு டெண்டர்களை விடுவதில் தமிழக அரசு காட்டும் ஆர்வத்திலும் அக்கறையிலும் கொஞ்சமாவது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காட்டியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகி இருக்காது.

தங்களின் திறமையின்மையால் நாளுக்கு நாள் சூழல் மோசமாகி வருவதை மறைப்பதற்குத்தான் முதல்வர் தற்போது கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிறார். 'ஒரே ஒருவர் கூட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டார்கள்' என்று சட்டப்பேரவையில் ஆவேசமாக வசனம் பேசியபோது முதல்வருக்குக் கடவுள் நினைவுக்கு வரவில்லையா? 'மூன்றே நாட்களில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படும்' என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்துச் சொன்னபோது, தான் ஒரு மருத்துவர் இல்லை என்பது முதல்வர் பழனிசாமிக்குத் தெரியாதா? 'யார் சொல்வதையும் கேட்க மாட்டேன்; அனைத்தையும் நான் அறிவேன்' என எல்லோரையும் எடுத்தெறிந்து பேசிய போதெல்லாம், தான் ஒரு 'உலக மகா மருத்துவ நிபுணர்' என்று முதல்வர் நினைத்துக் கொண்டிருந்தாரா?

 

இவ்வளவு நாட்களாக எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சொன்ன கருத்துகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இப்போது கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி, பலி எண்ணிக்கை 757 ஆக உயர்ந்து, நாள்தோறும் உயிரிழப்போரின் அளவு அதிகரித்துக்கொண்டே வரும் நேரத்தில், மொத்தப் பழியையும் கடவுளின் மீது போட்டுவிட்டு தப்பிக்க நினைத்தால் மக்கள் மட்டுமல்ல; கடவுளும் இவர்களை மன்னிக்க மாட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios