Gnani death M.K.Stalin mourning

பகுத்தறிவாளர், துணிச்சலான பத்திரிக்கையாளர் போன்றோருக்கு எழுத்தாளர் ஞானியின் மரணம் ஓர் பேரிழப்பாகும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், நாடக ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட ஞாநி என்கிற சங்கரன் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர் ஞானி.

சமூக விமர்சன நோக்குள்ள வீதி நாடகங்களும் மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். பரீக்‌ஷா என்ற நாடக குழுவை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும்படங்கள், நாடகங்கள் இயக்குதல் போன்ற பணிகளை அனைவரும் பாராட்டும்படி செய்து வந்தார். ஞாநி இயக்கிய பெரியார் குறித்த தொலைகாட்சிப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து சிறந்த அரசியல் விமர்சகராக மிகச் சிறப்பான பணியாற்றி வந்தார். தொலைக்காட்சிகளில் இவர் எடுத்து வைக்கும் வாதங்கள் அறிவுப்பூர்வமாக இருக்கும்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்த சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். காலமான எழுத்தாளர் ஞானிக்கு பல்வேறு தரப்பினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினி, மனோபாலா உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தனிர். 

இந்த நிலையில் திமுகவின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டான், ஞானியின் இழப்பு குறித்து இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரிகையாளர் ஞாநி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. தனித்துவமான அரசியல் மற்றும் சமூகப் பார்வையுடன் கட்டுரைகள் பலவற்றைப் படைத்திருக்கும் ஞாநி அவர்கள், பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, இணையதளம் உள்பட ஊடகத்துறையின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தியவர். மேலும், தலைவர் கருணாநிதியிடமும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களிடமும் மிகுந்த நட்பு பாராட்டி வந்த ஞானி அவர்கள், முரசொலி நாளேட்டில் புதையல் எனும் சிறப்புப் பகுதியை, சக பத்திரிகையாளர்களான சின்னகுத்தூசி, க.திருநாவுக்கரசு ஆகியோருடன் இணைந்து வழங்கியவர்.

தனிப்பட்ட முறையில் என் மீதும் அன்பு செலுத்தி, ஒரு பத்திரிகையாளராக தனது கருத்துகளை வெளிப்படையாக பரிமாறிக்
கொண்டவர். அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், எப்போதும் சுயசார்புடன் இயங்கி வந்த ஞாநி அவர்களின் மறைவு, தமிழ்ப்
பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.