மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோர் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து கூட்டணி தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக அறிக்கப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை மெகா கூட்டணியுடன் எதிர்கொள்ள அதிமுக தயாராகி உள்ளது. ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் என்.ஆர்.காங்கிரசுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகளுடன் ஜிகே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் இன்று ஜி.கே.வாசன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர், பொதுச்செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது நிர்வாகிகள் தரப்பில் நமது கட்சிக்கு என்று தனியாக குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே 2 தொகுதிகள் கேட்க வேண்டும் என கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தினர். 

இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி வருகை ஆகியோர் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன் கூட்டணி தொடர்பாக நாளை காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் கிரவுன் பிளாசா ஓட்டலில் நாளை ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.