geethalakshmi in income tax office

கடந்த 7ம் தேதி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த விசாரணைக்கு வரும்படி வருமான வரித்துறை அதிகாரிகள், மேற்கண்ட 4 பேருக்கும் சம்மன் அனுப்பினர்.

அதன்பேரில், கடந்த திங்கட்கிழமை அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால், துணை வேந்தர் கீதாலட்சுமி, விசாரணைக்கு செல்லவில்லை.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனு செய்தார். அவரது மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், கீதாலட்சுமிக்கு கண்டனம் தெரிவித்தது. அதிகாரிகளின் விசாரணைக்கு செல்லவேண்டும் என உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து சற்று நேரத்துக்கு முன் துணை வேந்தர் கீதாலட்சுமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் சென்றார். அங்கு அவரிடம், இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

கடந்த 7ம் தேதி அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதில் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ துறை இயக்குனராக இருந்தபோது, பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 30க்கு மேற்பட்ட கேள்விகள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், கீதா லட்சுமியின் வீட்டில் சோதனை நடந்தபோது, அவர் வாக்குமூலம் அளித்தாக தெரிகிறது. அதற்கான கேள்விகளும் இன்று கேட்கப்படும். பெரும்பாலும் இன்று நடைபெறும் விசாரணை கேள்வி பதிலாகவே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின் போது, கீதாலட்சுமியிடம் கேட்கப்படும் கேள்விகளை வாக்குமூலமாக பதிவு செய்யப்படும். வீடியோ ஆதரமாகவும் சேர்க்கப்படும். இந்த விசாரணை இன்று மாலை வரை நடக்கும் என தெரிகிறது.