Geetha Laksmi
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறையின் நடத்திய சோதனை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வில்லை என்றால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார், கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கடந்த வெள்ளிக் கிழமை வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10 ஆம் தேதி இவர்கள் மூவரையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறையினர் உத்தரவிட்டனர்.
இதில் விஜய பாஸ்கரும், நடிகர் சரத்குமாரும் வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆனால் கீதா லட்சுமி, இதற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு, வருமான வரித்துறையினரின் சம்மனுக்கு தடை விதிக்கவோ, ஆஜராகும் தேதியை நீட்டிக்கவோ முடியாது என்றும், இப்பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி ஆஜராகி அனுமதி அளிக்கும் படி கேட்டுக் கொண்டதையும் நீதிபதி நிராகரித்தார்,
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கீதா லட்சுமிக்கு வருமான வரித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
