நான் வலதுமில்லை, இடதுமில்லை, மய்யம்! என்று என்னதான் கமல்ஹாசன் சொன்னாலும் கூட, அவரது கடந்த கால கொள்கைகளும், பேச்சுகளும், நடவடிக்கைகளும் அவர் வலதுசாரிகளுக்கு எதிரானவர் என்பதையே காட்டுகின்றது. மாட்டுக்கறிக்கு தடை விஷயத்தில் எதிர்ப்பு காட்டியதில் துவங்கி பல விஷயங்களில் பி.ஜே.பி.க்கு எதிர்பானவராகவே தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார், அடையாளப்படுத்தவும் படுகிறார் கமல். 
இது போதாதென்று தனது அரசியல் குருவாக பி.ஜே.பி.யின் ஜென்ம விரோதிகளான பினராயி விஜயனையும், அரசியல் தோழனாக கெஜ்ரிவாலையும் அவர் மேற்கோள் காட்டுவதுமே அவர் பி.ஜே.பி.க்கு எதிரானவர் என்று காட்டுவதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

சும்மா இருக்கும் போதே பி.ஜே.பி.யை போட்டுப் புரட்டிய கமல், இப்போது கட்சி வேறு துவங்கிவிட்ட நிலையில் மைய அரசுக்கு எதிராக தனது ‘மய்யம்’ மூலமாக பெரும் மையம் கொள்ள துவங்கிவிட்டார். 

இதில் கடுப்பானது பி.ஜே.பி. இவரை இப்படியே பேசவும், செயல்படவும் விட்டால் எதிர் வரும் தேர்தல்களில் தமிழகத்தில் தங்களின் காலூன்றலுக்கு பெரும் எதிராய் அமைவார்! என்று யூகித்திருக்கிறது. அதனால் கமலை துவக்கத்திலேயே தட்டி வைக்க முடிவெடுத்து சில காரியங்களை செய்ய துவங்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதன் ஒரு நிலைதான் ‘கெளதமியை உசுப்பிவிட்டது.’ என்று போட்டு உடைக்கிறார்கள். 

அதாவது “கமலை பிரிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இதுவரையில் அவரைப் பற்றி எந்த தாக்குதலையும் பெரிதாய் கவுதமி நிகழ்த்தவில்லை. ஆனால் இப்போது கமலை தாறுமாறாக பேசுகிறார் என்றால் இதன் பின்னணியில் பெரிய அரசியல் உள்ளது. 

‘நான் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவதாக சில தகவல்கள் வருகின்றன. இது தவறானது. அவருடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழில் முறையிலோ நான் சார்ந்து இயங்கவில்லை.’ என்று நேற்று கூறியுள்ளார். இத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அதன் பிறகுதான் கமல் மீதான தாக்குதலை துவக்கும் கவுதமி ‘கமலோடு இணைந்து செயலாற்றியபோது அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். வேறு பட அதிபர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். 

கமல் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் படஙக்ளிலும் பணியாற்றினேன். ஆனால் அந்த படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. அந்த பணம் என் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. பல முறை சம்பள பாக்கியை பெற முயன்றும் கிடைக்கவில்லை. கமல்ஹாசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட போது பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டேன். ஆனால் இப்போது தனியாகத்தான் வாழ்கிறேன்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளதன் பின்னணியில்தான் அரசியல் உள்ளது. 

அதாவது இதெல்லாம் நடந்து இத்தனை மாதங்கள் கடந்த பின்பு கவுதமி இப்போது கமல்ஹாசனை சாடுவது முழுக்க முழுக்க பின்னணி தூண்டுதலால்தான். அதாவது கமல்ஹாசனை பொதுமக்கள் மத்தியில் நடத்தை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதே அதிகார மையத்தின் எண்ணம். 

தனிப்பட்ட வாழ்விலும், தனக்காக வேலை செய்த நபருக்கு சம்பளம் தருவதிலும், தான் நோயுற்ற போது உதவியருக்கு பதிலுதவி செய்வதிலும் கமல் கடமை தவறியவர், நேர்மையற்றவர், நம்பிக்கை மறந்தவர்...என்றெல்லாம் சமுதாயத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே மேலிருப்போரின் எண்ணம். அதற்கு இப்போது கவுதமி பயன்படுத்தப்பட்டுள்ளார். 

இனி வரும் நாட்களில் கமலின் முகம் பொதுவெளியில் அசிங்கப்படும் வண்னம், கவுதமி இன்னும் பல உண்மைகளை போட்டுடைப்பார். கமலோடு ‘இணைந்து செயல்பட்ட’ பல நடிகைகள் இதேபோல் வரிசை கட்டி அவருக்கு எதிரான ரகசிய திரைகளை அவிழ்த்துக் கொண்டே இருப்பார்கள். கவுதமின் பின்னணி பி.ஜே.பி.யே!” என்கிறார்கள். 

இது எந்தளவுக்கு உண்மையோ தெரியவில்லை, ஆனால் கமலின் பிம்பம் இனி தொடர்ந்து உடைபடும் என்பது மட்டும் தெளிவாகிறது.