நடிகை சாந்தினியின் பின்னணியில் யாரோ பணம் பறிக்கும் கும்பல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலிருந்து கழற்றிவிடப்பட்டவர் டாக்டர் மணிகண்டன். தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த அவர், கேபிள் டிவி விவகாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் வெளிப்படையாக மோதியதால், அமைச்சர் பதவியை இழந்தார். அப்போது முதல் மணிகண்டன் அதிமுகவில் ஓரம் கட்டுப்பட்டு இருந்தார். நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட மணிகண்டனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக அவர் மீது நடிகை சாந்தினி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்தப் புகாரில், தன்னுடன் பாலியல் உறவு வைத்திருந்தார் என்றும் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் மணிகண்டன் மிரட்டுவதாகவும் சாந்தினி புகார் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சாந்தினியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்துள்ளார்.
 “அமைச்சராக இருந்தபோது என் மீது ஒரு சிறு புகார்கூட இல்லை. அவர் ஏதாவது காரணத்துக்காக என்னை சந்தித்திருக்கலாம். சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கலாம். மலேசியா, சிங்கப்பூரிலிருந்து பல தமிழர்கள் இங்கே வருகிறார்கள். அப்படி என்னை வந்து சந்தித்திருக்கலாம். அப்படி எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு இப்போது மிரட்டுகிறார்கள். ஆட்சி முடிந்த பிறகு இப்படி பேசுகிறார். அவருடைய பின்னணியில் யாரோ பணம் பறிக்கும் கும்பல் உள்ளது. ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது” என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.