கஜா புயல் கரைகடந்த சில மணி நேரங்களில், உள் சேதாரங்களை உணராமல் முதல்வரில் துவங்கி, எதிர்கட்சியினர் வரை ’புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் பாராட்ட தக்க வகையில் அமைந்துவிட்டது’ என்று சிலிர்த்தார்கள். ஆனால் தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழி மட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை. என்றார். 

ஸ்டாலினின் நெருங்கிய வட்டார முக்கிய முகங்கள் என்ன தளபதி இவங்க இப்படி பேசுறாங்க. எதிர்கட்சி தலைவர் நீங்களே நேர்மறையா கருத்து சொல்லியிருக்கீங்க! இவங்க இதிலுமா அரசியல் பண்ணனும்? என்று வத்தி வைத்தனர். ஸ்டாலினின் முகம் சுருங்கியது. ஆனால் அடுத்த ஒரு நாளுக்குள்தான் கஜா, டெல்டாவை கழட்டிப்போட்ட கோர முகம் உலகத்துக்கு தெரிந்தது. 

இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன் கனிமொழியை கண்டு எரிச்சலடைந்தவர்களோ அவரை ஆச்சரியமாக பார்க்க துவங்கினர். கஜா விஷயத்தில் கனிமொழி மிக புத்தி கூர்மையாகவும், தீர்க்க தரிசனமாகவும் நடந்து கொண்டதாக அரசியலின் மேல்நிலை விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இது ஸ்டாலினின் கவனத்துக்குப் போனது. அவர் அப்செட் என்று தகவல் வந்தது. 

இந்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளை கனிமொழி வந்து பார்வையிடாதது ஒரு குறையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், அண்ணனிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை என்று கனி கவலை தோய்ந்த முகத்துடன் விரல் நீட்டுகிறாராம். ஆக்சுவலாக பாதிப்பு பகுதிகளை ஒரு ரவுண்டு விசிட் செய்திட கனிமொழி திட்டமிட்டாராம். கழக தலைவர் எனும் முறையில் அண்ணன் ஸ்டாலினிடம் இதற்கான முன் அனுமதி வாங்கிட நினைத்து, அவர் தரப்புக்கு பேசப்பட்டதாம். 

ஆனால் ‘சொல்றோம்’ என்றளவில் அனுமதி பெண்டிங்கில் போடப்பட்டுவிட்டதாம். அதன் பிறகு சின்னதாக கனி அதை நினைவூட்டியும் அனுமதியில்லை என தகவல். இப்படி அனுமதி கிடைக்காமல் இருப்பதால், கஜா பாதிப்பு பகுதிகளை தவிர்த்த கனிமொழி என்று தன் பெயர் சேதாரப்படுகிறதே! இனி தேர்தல் காலங்களில் தான் அங்கு சென்றால் ’கஜாவுக்கு வராதவள், ஓட்டுக்கு வந்திருக்கிறார்’ என்று மக்கள் தூற்றுவார்களே! என்றும் தனக்கு நெருங்கிய நிர்வாகிகளிடம் சொல்லி புலம்புகிறாராம். அதைவிட, புயல் பாதித்த பகுதிகளில் ஒன்றான தன் அப்பாவின் சொந்த ஊரான திருவாரூரில் ஒரு ஆறுதல் விசிட் அடித்திட ஆசைப்படுகிறாராம் கனிமொழி! அதற்கு கூட வாய்ப்பில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது...என்று அவரது வட்டாரம் கலங்குகிறது. 

இச்சூழலில் ‘பாப்பா ரொம்ப தீர்க்க தரிசனமா அந்த புயல் விவகாரத்தை கணிச்சுது. இதுல பாப்பாவுக்கு கிடைச்ச பாராட்டுகளை தலைமை விரும்பலை. எங்கே விட்டா  இன்னும் அந்த மண்ணுக்கு போயி ஓவரா பெயர் வாங்கிடுமோன்னு சொல்லி கட்டங்கட்டி உட்கார வைக்கிறாங்க.’ என்று ஒரு தாக்கிது ராஜாத்தியம்மாளின் கவனத்துக்கு சென்றதாம், இதைத்தொடர்ந்து உஷ்ணமாகிவிட்டாராம் அவர். 

ஆனால் ஸ்டாலின் தரப்போ, கனிமொழி கஜா பாதிப்பு பகுதிகளுக்கு செல்ல காலம் தாழ்ந்ததுக்கு தலைவர்தான் காரணம் என்று கைகாட்டப்படுவதை கடுமையாக எதிர்த்திருக்கிறது. அப்படியெல்லாம் அடுத்தவர்களின் முயற்சிகளில் தடுத்து, தடை சொல்பவராய் இருந்தால் ஸ்டாலின் என்றோ ஜெயலலிதாவை விட பெரிய அரசியல்வாதியாகி இருப்பார்! என்று பொளேர் பதில் தருகிறார்கள். எது உண்மையோ? அறிவாலய மனசாட்சிக்கே வெளிச்சம்.