கஜாவால் அடித்து துவைத்து சீரழிக்கப்பட்ட டெல்டா, மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும்! என்கிறார்கள் வல்லுநர்கள். டெல்டாவை சக மாவட்ட மக்கள் ‘மூழ்கிய வயல்வெளி’ ஆக பார்க்க, அரசியல்வாதிகளோ ‘மிதக்கும் வாக்கு வங்கி’யாக பார்க்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு உள்ளது. 

ஆளும் அ.தி.மு.க.வினர் கூட பெரிய அளவில் அரசியல் பார்வையுடன் அங்கு வலம் வரவில்லை. எப்போது விரட்டுவார்களோ? எப்போது முற்றுகை நடக்குமோ? எனும் பயத்துடன் தான் சுற்றி வருகிறார்கள். ஸ்டாலின் கூட சம்பிரதாயத்துக்கு நின்று விட்டு திரும்பிவிட்டார். ஆனால், தினகரன் மட்டும் புயல் சிதைத்த இடத்தில் நின்று அரசியல் செய்துவிட்டார்!  என்று பொங்குகிறது ஆளும் தரப்பு.

 வீடு, வாழ்க்கை, வயல் வரப்பு என எல்லாம் பறிபோன நிலையிலிருக்கும் மக்களுக்கு மத்தியில் நின்று  பிரச்சாரமே செய்திருக்கிறார் தினா! என்று கர்ஜித்து வருகின்றனர். தினகரன் மீது குற்றம்சாட்டி அவர்கள் எடுத்து வைக்கும் விஷயங்களின் ஹைலைட் பாயிண்ட்ஸ் இதோ...

*    ஆறுதல், நிவாரணம் கொடுக்க சென்றால் அதை செய்துவிட்டு திரும்பாமல் மொத்தம் பதினோறு நாட்கள் டெல்டாவில் டேரா போட்டது தவறு.
*    தேர்தல் பிரசாரம் போல் அவர் நிவாரண பொருட்கள் கொடுக்கும் பகுதிகள் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டு அங்கே மக்களும், அ.ம.மு.க. தொண்டர்ளும் குவிக்கப்பட்டு மாஸ் காட்டப்பட்டது தவறு. 
*    ஆறுதல் தர வந்திருக்கிறோம்! எனும் எண்ணமே இல்லாமல், பிரசார வேனில் வலம் வரும் தினா, ஒவ்வொரு பாயின்ட் வந்ததும் வேனின் மேற்புறம் வந்து மைக்கை பிடித்து அரசியல் பேசியது மகா தவறு
*    ஏற்கனவே நொந்திருக்கும் மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறாமல், அரசு மற்றும் முதல்வர்கள் பற்றி வதந்தி பரப்பி ஆத்திரம் கிளப்பிவிட்டிருக்கிறார். இது மாபெரும் தவறு.

*    சுகாதாரதுறை அமைச்சரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் வந்து நின்று, இங்க ஒரு அமைச்சர்  இருக்காரே வந்திருக்க மாட்டாரே? எம்.பி.யான ரவுடி குமார் வந்திருக்கமாட்டாரே! என்று மக்கள் பிரதிநிதிகளை அவதூறாக பேசி, அவர்களுக்கு எதிராக மக்களை உசுப்பேற்றியது குற்றம். 
*    தினகரன் வந்து இவ்வளவு அரசியல் செய்துவிட்டு சென்றுவிட்டார். இப்போது டெல்டாவுக்கு வெளியில் நின்றபடி, கஜா மண்ணிலிருக்கும் தன் கட்சிக்காரர்களுக்கு சில சிக்னல்களை கொடுக்கிறார். அதன் மூலம் அவர்கள் ‘எல்லாம் இழந்து கிடக்கும் உங்களுக்கு எதுவுமே தராத அரசுக்கு எதிராக போராடுங்கள்! பெட்ஷீட் உள்ளிட்ட புயல் நிவாரண பொருட்கள் வாங்கியதில் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள்.’ என்று உசுப்பிவிடுகிறார்கள். இதன் மூலம் ஒரு கலவர சுழலை உருவாக்குகிறார். இது சகிக்க முடியாத குற்றம்.  
என்று கொதித்துக் குற்றம்சாட்டி தள்ளுகின்றனர். 

ஆனால் இவை எதற்கும் மசியாதவராக தனது அடுத்த கட்ட அரசியல் அதிரடிக்கு பிளான் செய்து வருகிறார் தினா.