பெட்ரோல், டீசல் சிலை உயர்வைக் கண்டித்தும், ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தக் கோரியும், இன்று முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சருடன் நடந்த பேச்ச வார்த்தை தோல்வி அடைந்தததையடுத்து 90 லட்சம் லாரிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளன. 

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது. மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் கடந்த 15-ந்தேதி முதலே வடமாநிலங்களுக்கு சரக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கட்டுமான பொருட் கள், தீப்பெட்டி, ஜவ்வரிசி, மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைய தொடங்கி உள்ளன. இதேபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள  32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள், தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் முழுமையாக கலந்து கொண்டுள்ளன.

வடமாநிலங்களுக்கு கடந்த 15-ந் தேதி முதல் சரக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டதால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் சுமார் 15 ஆயிரம் லாரிகள், 16-ந் தேதி முதலே நிறுத்தப்பட்டு விட்டன.  இன்று முதல்  அனைத்து பகுதிகளிலும் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை கைவிட மாட்டோம் என்றும். இதன் காரணமாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.250 கோடி இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்..