நாளை மறுநாள் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் காலியாக உள்ள 4 சட்டப் பேரவைத்  தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 23 ஆம் தேதி  எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா மரணம், கொடநாடு விவகாரம், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் போன்ற பிரச்சனைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது வரை பதில் எதுவும் சொல்லாமல் தவிர்த்து வருவதாக குற்றம்சாட்டினார்.

கடந்த 7 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் பாலியல் கொடுமை நடைபெற்று வருவதாகவும், இதில் ஆளும் அதிமுக தொடர்பு உள்ளது என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இடைத் தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெறும் என்றும் அப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்றார்.

தற்போது தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணிக்கு 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக ஜெயிக்கும் என்றும், மொத்தமாக 119 எம்எல்ஏக்கள் இருப்பார்கள்.  அப்போது திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.