மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸ் தலைவர் கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா செய்ததையடுத்து நேற்று ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

பெங்களூரு காவல்துறையில் ஐ.ஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கே.சி.ராமமூர்த்தி, காங்கிரஸில் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தவர். கர்நாடக மாநிலத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 2022 வரை உள்ளது. இவர் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கே.சி. ராமமூர்த்தி கடந்த 16-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி வெங்கய்யா நாயுடுவிடம் கடிதம் கொடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டதையடுத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி வெளியாகின. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச் செயலாளர்கள் பூபேந்தர் யாதவ், அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் ராமமூர்த்தி பாஜகவில் இணைந்தார்.

சமீப காலமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆளும் பாஜகவில் இணைவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புவனேஷ்வர் கலிதா, சஞ்சய் சிங் ஆகியோரும் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். அதேபோல், சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த நீரஜ் சேகர், சுரேந்திர சிங் நாகர், சஞ்சய் சேத் ஆகியோரும் சமீபத்தில் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.