அதிமுக இரு அணிகளாக பிரிந்தே போதே தான் எந்த அணி குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும், தன்னை வீணாக வம்புக்கு இழுக்கிறார் டிடிவி தினகரன் எனவும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். 

இரண்டு அணிகளாக பிரிந்து இருந்த ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் தற்போது ஒன்றாக இணைந்துள்ளது. பின்னர், ஒபிஎஸ்சின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். 

இதனால் எடப்பாடி ஆட்சி தற்போது கவிழும் நிலையில் உள்ளது. காரணம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். 

இதனிடையே கட்சி நடவடிக்கை என கூறி எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை நீக்கிவிட்டு தமது தரப்பு நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார் டிடிவி தினகரன். 
அந்த வகையில் நேற்று சைதை துரைசாமியை அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டார். 

இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த சைதை துரைசாமி, சசிகலா என்னை அமைப்பு செயலாளராக நியமித்தபோதே அந்த பதவி தமக்கு வேண்டாம் என கடிதம் எழுதினேன் எனவும், என்னை வீணாக டிடிவி தினகரன் வம்புக்கு இழுக்கிறார் எனவும் தெரிவித்தார். 

மேலும் பத்து ஆண்டுகளாக டிடிவி எங்கே போனார் எனவும், கட்சிக்குள்ளேயே வரமாட்டேன் என்று கடிதம் எழுதிய சசிகலா எப்படி கட்சிக்குள் வந்தார் எனவும் சைதை துரைசாமி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். 

தினகரன் யார் எனவும் அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு  எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.